search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயோ பேக்"

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. #Plastic
    கோவை:

    தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் முனைப்புடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதை போலவே பொது மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அறிவிப்பை முழுமையாக செயலாக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர்.

    தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருட்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கோவையில் விற்பனை செய்யப்படும் ‘பயோ-பேக்குகள்’.

    பெங்களூரை சேர்ந்த ரிஜினோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து நிறுவன அதிபர் சிபி செல்வன் கூறியதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மக்கும் தன்மையிலான இந்த பைகள் 3 மாதத்தல் மக்கி விடும். எளிதாக தண்ணீரில் கரைந்து விடும் தன்மை கொண்டவை. அந்தத் தண்ணீரை நாம் தவறுதலாக அருந்தினாலும், அதனால் உடல்நலன் பாதிக்கப்படாது. தீப்பற்றி எரியும் போது பிளாஸ்டிக் பைகள் உருகுவது போல் இல்லாமல், இந்த பைகள் சாம்பலாகி விடும். அந்தப் பைகளை விலங்குகள் உண்டாலும் அவற்றுக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது.

    தாவரங்களில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்கள் மற்றும் மக்காசோளம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த பைகள் தயாரிக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பை போலவே காணப்படும் இந்த பயோ பேக்கை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசினாலும், பொடி, பொடி துகள்களாகி சில நாட்களில் மக்கி விடும். மருந்து கடைகள், ஓட்டல், ஜவுளிகடைகள், தொழிற்சாலைகளில் பொருட்கள் பார்சல் செய்ய ஏராளமானோர் இதனை வாங்குகின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் எங்களுக்கு ஆர்டர் கிடைத்து வருகிறது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோன்ற பைகள் போலியாக விற்கப்படுவதை தடுக்க இந்த பைகளில் கோவை ஸ்மார்ட் சிட்டி லோகோ அச்சிடப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அங்காடியில் இந்த பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு 1 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் பல வகைகளில் பைகள் உள்ளன.

    தயாரிப்பு குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த பைகளுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. பொதுமக்கள் இந்த பைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். எனவே தயாரிப்பு அதிகரிக்கும் போது விலை குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Plastic
    ×